சென்னை,
நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார்.
வெளிநாட்டில் 8வது வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யா பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் இந்த பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடுமையாக எதிர்கேள்விகளை முன்வைத்து இருந்தனர். கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் மற்றும் எம்.பி.யாக உள்ள திருநாவுக்கரசர், புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து. எனவே நானும் ஆதரிக்கிறேன். அதனை வரவேற்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளின் தரம், இன்னும் அதிகமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.