ராமநாதபுரம்,
விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்க தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மதுரை முதல் பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 75 சதவீத பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இந்த பணிகளை ராமநாதபுரம் வரையும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்கியது. இதன்படி மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிகளின் தொடர்ச்சியாக ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புண்ணியதலமான ராமேசுவரம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தை நீட்டிக்க, பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு, ராமேசுவரத்தின் முக்கியத்துவத்தை கருதி ராமேசுவரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதி வழங்கி, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற பரிசீலனையின்போது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுடன் இணையும் முகப்பு பகுதியில் உள்ள பாம்பன் கடலில் புதிதாக உலகத்தரம் வாய்ந்த அளவில் நான்கு வழிச்சாலை பாலம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளார். பிரதமரின் அனுமதி கிடைத்துள்ளதால் மத்திய அரசு சார்பில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி டெல்லியில் உள்ள பீட்பேக் இன்பரா என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் விரைவில் பாம்பன் பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
பாம்பன் கடலில் அமைய உள்ள பாலம் உலகத்தரம் வாய்ந்த அளவில் கான்கிரீட் பாலமாக அல்லாமல் கேபிள்கள் மூலம் தொங்கு பாலம் போன்று நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே ரூ.900 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் போட திட்டமிட்டிருந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் போட திட்டமிட்டுள்ளதால் திட்ட மதிப்பிடு மாற்றியமைக்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு மேல் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலத்தில் நான்கு சக்கர - கனரக வாகனங்களும், ஏற்கனவே இருக்கும் பழைய ரோடு பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டால் ராமேசுவரம் உலகளாவிய சுற்றுலா தலமாக மாறுவதோடு இன்னும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு உள்ளது.