தமிழக செய்திகள்

புதுப்பெண் கழுத்தை அறுத்துக்கொலை; கணவர் தற்கொலை முயற்சி

கோவில்பட்டி அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் மருதையா மகன் மாரியப்பன் (வயது 28), கூலி தொழிலாளி. இவருக்கும், கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் மகள் சண்முகபிரியாவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய அக்காள் காளியம்மாள் வீட்டுக்கு சென்று பகல் வேளைகளில் சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வருவார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவிலும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சண்முகபிரியாவின் கழுத்தை அறுத்ததுடன் கைகளில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

உடனே போலீசார் தன்னை பிடித்து விடுவார்களோ என பயந்து போன மாரியப்பன் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் மாரியப்பன் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் காளியம்மாள் தனது தம்பியை தேடி அங்கு வந்தார். வீட்டுக்குள் கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது