தமிழக செய்திகள்

சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது

சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ‘ஹெல்மெட் ’அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 வசூலிக்கப்பட்டது.

சென்னை,

நாட்டில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அன்றாடம் சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன. உயிர்பலியும் ஏற்படுகின்றன. சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை விசயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அபராத தொகை அதிகரிப்பு

அதன்படி தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை பல மடங்கு உயர்த்தி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் க.பணீந்திர ரெட்டி சமீபத்தில் அரசாணை வெளியிட்டார்.

புதிய நடைமுறையின்படி 'ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், 'லைசென்சு' இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் (நோ பார்க்கிங்) ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், தடை செய்யப்பட்ட சாலையில் (நோ என்ட்ரி) வாகனங்களை ஓட்டினால் ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு அமலுக்கு வந்தது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் இந்த புதிய அபராத விதிப்பு 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார். அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதங்களை வசூலிக்கும் 'இ-சலான்' எந்திரத்தில் பழைய அபராத தொகையை நீக்கிவிட்டு புதிய அபராத தொகையை பதிவேற்றம் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த உத்தரவு 28-ந்தேதிக்கு (நாளை) பின்னர் தானே அமலுக்கு வரும் என்ற அலட்சியத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு நேற்று அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இந்த புதிய அபராத நடைமுறை (புதிய மோட்டார் வாகன சட்டம்) அமலுக்கு வந்தது. சென்னையின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை மடக்கினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

வாகன சோதனையின்போது 'ஹெல்மெட்' அணியாமல் போலீசாரிடம் சிக்கிய வாகன ஓட்டிகள் வழக்கம் போல் மின்னணு பரிவர்த்தனை மூலம் ரூ.100 அபராதம் செலுத்த முற்பட்டனர். ஆனால் அபராத ரசீது ரூ.1,000 என்று வந்ததால் தலையில் இடி விழுந்தது போன்று அதிர்ந்து போனார்கள்.

இந்த அபராத உயர்வு திடீரென்று அமலுக்கு வந்ததால் போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சில இடங்களில் வாக்குவாதங்கள் அரங்கேறின.

இன்று முதல் இந்த அபராத நடவடிக்கையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் புதிய அபராத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் யாரேனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்களிடம் கனிவாக பேசி சமரசம் செய்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் போலீஸ் உயரதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்