சென்னை,
ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் போதிய அளவு பருவ மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு புயலுடன் வடகிழக்கு பருவ மழை நன்கு பெய்து வருவதால் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகள் வழியாக ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஓராண்டுக்கு தேவையான குடிநீர் சேமிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக புதிதாக திறக்கப்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியையும் சேர்த்து 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.75 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளிலும் தற்போது 10.30 டி.எம்.சி. என்ற அளவில் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. ஏரிகளில் நிரம்பும் நிலையில் இருப்பதால், சென்னை மாநகருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கி வந்த குடிநீர் தற்போது தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பருவ மழை பொய்த்து போகும் ஆண்டுகளில் வரும் கோடைகாலத்தில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விடுகின்றன. கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், விவசாய விளைநிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், நெய்வேலி சுரங்கம் மற்றும் கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒவ்வொரு கோடையிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை கொண்டு வந்து வினியோகம் செய்வதில் தான் அதிககவனம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏரிகளில் போதுமான நீர் இருப்பு இருப்பதால் 2021-ம் ஆண்டு கோடையில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை இருக்காது. இதனால் வறட்சியை விட்டு விட்டு முன்னேற்றப்பணிகளில் அதிக கவனம் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சராசரியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிரம்பும் வரலாற்றை கொண்டு உள்ளது.
வறட்சி காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்வதால், மண்ணில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் விடாத நாட்களில் காலியாக இருக்கும். இதனால் குடிநீர் குழாய்கள் பத்து முதல் 15 ஆண்டுகளிலேயே துருப்பிடித்து வருகிறது. தினசரி தண்ணீர் வினியோகம் செய்வதாக இருந்தால் குடிநீர் குழாய்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பயனளிக்கின்றன.
இதனால் சென்னையில் உள்ள வியாசர்பாடி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, தியாகராயநகர், அடையாறு ஆகிய 7 இடங்களில் பழுதான குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு, உலக வங்கி உதவியுடன் ரூ.300 கோடி மதிப்பில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீரை பொறுத்தவரை கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி சராசரியாக 650 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் 150 மில்லியன் லிட்டர் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக வினியோகிக்கப்படுகிறது.
இதுதவிர நவீன முறையில் தலா 10 மில்லியன் லிட்டர் நீர் சுத்தம் செய்யப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள 210 ஏரிகளில் குழாய்கள் மூலம் கொண்டு சென்று அங்குள்ள கிணறுகளில் விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனை 260 மில்லியன் லிட்டராக சுத்திகரிக்கவும் வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.