சென்னை,
தமிழக அரசு, மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 20-ந்தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணையும் நோக்கத்தில், தினமும் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதனால், சுமார் 500 விண்ணப்பங்கள் தினசரி வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதாவது, குடும்பத் தலைவர் இறந்த நிலையில் அவரின் பெயரை நீக்குதல், கூட்டு குடும்பமாக இருப்பவர்கள் தனித்தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல் என பல்வேறு வழிகளிலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
உடனடியாக கிடைக்காது
ஆனால் அதே நேரத்தில் வருவாய் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் முதலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகிக்கும் பணியில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, மேற்கூறப்பட்ட வகையில் புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை தற்போது பரிசீலிக்கவும், கள ஆய்வு மேற்கொள்ளவும் வேண்டாம் என சம்பந்தப்பட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
எனவே, புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.