தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர நேரடி ரெயில் இயக்க வேண்டும் என்று மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆய்வு
ரெயில்வே பயணிகள் சேவைக்குழு உறுப்பினர் பொன்.பாலகணபதி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா.பிரமநாயகம், நிர்வாக செயலாளர் ஜே.ஏ.என்.ஆனந்தன், துணைத்தலைவர் எஸ்.அந்தோணிமுத்துராஜா ஆகியோர் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
நேரடி ரெயில்
அந்த மனுவில், தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரெயில் இயக்க வேண்டும். நெல்லை-பாலக்காடு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. கோச்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு போர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.