தூத்துக்குடி,
கவின் கொலை வழக்கில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம். ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-தமிழ்செல்வி தம்பதியின் மகன் கவின். மென்பொறியாளரான இவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்ததாகக் கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். இதனிடையே சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீதான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு கிளை சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவினின் பெற்றோர் ஆறுமுகமங்கலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேற்று ஆறுமுகமங்கலத்தில் கவினின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு கூறியதாவது: "கவின் கொலை வழக்கில் கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கிலிருந்து எந்தக் குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வருகிற புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் உறுதியான வாக்குறுதியை அடுத்து, கவினின் பெற்றோர் தங்கள் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னியரசு பேசியபோது, "முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் சட்டமன்ற வேட்பாளர் சத்தியபாமாவின் உடல்மொழி குறித்து பேசியுள்ளார். பொதுவெளியில் பெண்களை கேலி செய்யக்கூடாது என்று 1998-ல் சட்டத்தைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. தந்தையின் சட்டத்தை மதித்து அவர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். மேலும், வட மாநிலங்களில் ஒரு உணவு, தென் மாநிலங்களில் ஒரு உணவு என பண்பாட்டு முறை உள்ளது.
மாணவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சிக்கன், மட்டன் வழங்கப்படுகிறது. உணவில் அரசியல் செய்வது அநாகரிகமானது. மனிதர்களை அடித்து சித்ரவதை செய்பவர்கள் மீது எந்த அக்கறையும் காட்டாதவர்கள், மாடுகளுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.