சென்னை, -
ரிசர்வ் வங்கியின் அனுமதியை மீறி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பான புகார்களை விசாரிக்க தனி பிரிவு அமைக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடன் தவணை செலுத்துதலை 3 மாத காலத்துக்கு ஒத்திவைக்க, அதாவது 31-8-2021 வரை ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை போல் இருக்கிறது. தற்போது புகார்களை கூட போலீசார் பெறாமல் இருக்கின்றனர்.
இதற்கு காரணம் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக போலீசாருடன் கைகோர்த்து உள்ளதாகவும், ரூ.45 லட்சம் மதிப்புள்ள வாகனம் ரூ.15 லட்சத்துக்கு அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுவதாகவும் சில சமயங்களில் தவணையை செலுத்தினாலும் கைப்பற்றப்பட்ட வாகனத்தை தர நிதி நிறுவனம் மறுக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. ஏலத்தில் விடப்படும் வாகனங்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் என்று வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த புகார்களை ஆதாரங்களுடன் தருவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தினை உருவாக்கி உள்ளதாகவும், புகார்களை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் அளிக்குமாறு வாகன உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் வங்கிசாரா நிதி நிறுவனங்களால் வாகன உரிமையாளர்கள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த புகார்களை விசாரிக்க தனி பிரிவை அமைக்கவோ அல்லது தனி அதிகாரிகளை நியமிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி கடன் வசூலில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் மீறி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீசாருடன் சேர்ந்து வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்தவும், வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் தனி பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.