சென்னை,
தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் விலகினாலும், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் அடுத்த வாரத்தில் பருவமழை முடியக்கூடிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கில் வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது. எனவே தென் இந்திய பகுதிகளில் வருகிற 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 33 செ.மீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 39 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும்.
சென்னை மாவட்டத்தில் 46 செ.மீட்டர் இயல்பான மழை பெய்ய வேண்டும். ஆனால் 50 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் அதிகமாகும். இந்த பருவமழை ஜூலை மாதத்தில் அதிகமாக பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.