சென்னை,
தமிழ்நாட்டில் 34 ஆறுகளும், நீர்வள ஆதாரத்துறையின் கீழ் 90 அணைகளும், 14,138 ஏரிகளும் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளதால் அனைத்து நீர்நிலைகளும் உறுதியான நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
* அனைத்து அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் (செயல்) நடந்தே சென்று ஆய்வு செய்து கரைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணை மற்றும் ஏரிகளின் கதவுகள், மதகுகள் ஆகியவை சரிவர இயங்குகின்றனவா? என்பதை அவர்கள் உறுதி செய்வதோடு, அவைகளை உடனடியாக சரிசெய்து உரிய புகைப்படங்களுடன் அரசுக்கு அக்டோபர் 10-ந் தேதிக்குள் அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கலெக்டர்களுக்கு கடிதம்
* வெள்ளநீர் வடிகால்களில் உள்ள இயற்கை தாவரங்கள், மிதக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் ஆகியவற்றை பருவமழைக்கு முன்னர் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பருவமழைக்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி வடிய மண்டல அளவில் சிறப்பு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* நீர்வளத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* பருவமழைக்கான முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தல், வெள்ளத்தடுப்பிற்கு தேவையான மணல் மற்றும் தளவாட பொருட்கள், ஜே.சி.பி. போன்ற எந்திரங்கள் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்தல், கால்வாய்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லுதல் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆற்று முகத்துவாரங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை என்ஜினீயர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு குழு
* நீர்வளத்துறையின் மண்டல தலைமை என்ஜினீயர்கள் குழுக்கள் அமைத்து அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* கனமழையின் போது 24 மணி நேரமும் முறைப்பணிகளில் பணியாளர் அமர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து, நீர் இருப்பை கண்காணித்து உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப நீர்வளத்துறை என்ஜினீயர்கள் (செயல்) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* சென்னை மாநகர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ள அபாயத்தை தடுக்க வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் பருவமழை முன்னேற்பாட்டிற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.