தமிழக செய்திகள்

நீட் தேர்வால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது : தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்! என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

‘இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படுகிறது ? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள். இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.

மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT