தமிழக செய்திகள்

போதிய வருகை இல்லாத சட்டக்கல்லூரி மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது

போதிய வருகை இல்லாததால், செமஸ்டர் தேர்வு எழுத சட்டக்கல்லூரி மாணவருக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பி.பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் என்னுடைய சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்தேன். இதனால், கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மேலும், 4-வது செமஸ்டர் தேர்வு கட்டணம், கடந்த ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்தவில்லை. உடல்நலம் தேறி பிப்ரவரி மாதம் கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரியை இடம் மாற்றுவதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரி செயல்படவில்லை. இதன் காரணமாக தேர்வு கட்டணத்தை பெற கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், போதிய வருகை இல்லை என்று என்னை செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, செமஸ்டர் தேர்வு எழுத எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த பதில் மனுவில், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக கட்டணத்தை மனுதாரர் செலுத்தவில்லை. அதேபோல ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கல்லூரி நடைபெறாத காலகட்டத்திற்காக, மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை. 66 சதவீதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு உள்ளதால், செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்க முடியாது. அதனால், அவர் 4-வது செமஸ்டர் தேர்வை எழுத மீண்டும் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, சம்பந்தப்பட்ட மாணவர் உரிய தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை. அதுபோல வருகைப்பதிவும் இல்லை. அதனால், செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவர் மீண்டும் 4-வது செமஸ்டரை படிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது