சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்பு.
திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பு. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் டி.கே.எஸ்.இளங்கோவனால் வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன். அனைவரும் தலைவரை இழந்திருக்கிறீர்கள். மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் முடிவு. மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன்.
விதிமுறைப்படி இடம் கொடுக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் கூறினார். ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.
மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி வழக்கறிஞர் குழுவுக்குதான் சேரும், அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி நீதிமன்ற தீர்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.