சென்னை,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவருடன், மூத்த நிர்வாகிகள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், கே.பாண்டியராஜன், செம்மலை, மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.
இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், இரு அணிகளும் விரைவில் இணையும் என்று கூறி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், அ.தி. மு.க.வில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலம் அவை சரி செய்யப்பட்டு இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இணைப்பு நடவடிக்கைகள் தாமதம் ஆவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அரசு மீது நிறைய விமர்சனங்கள் வைத்து இருந்தீர்கள். இந்த நிலையில் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடக்கிறதே?
பதில்:- பேச்சுவார்த்தை முடிந்து அதன் பின்னர் நாங்கள் தருகின்ற அறிக்கையில் அனைத்து அம்சங்களும் அடங்கி இருக்கும்.
கேள்வி:- கட்சியிலும், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்பதற்காகத்தான் இணைப்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்:- பேச்சுவார்த்தையின் போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆட்சி எங்களால் கவிழாது என்றும் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.