கொரோனா பணி
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக நர்சுகள், டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு நியமித்தது.அந்தவகையில் 2019-ம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் (எம்.ஆர்.பி.) மூலம் நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் கொரோனா சிகிச்சைக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறு பணியில் சேர்க்கப்பட்ட நர்சுகளுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்துடன் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது சில ஆஸ்பத்திரிகளில் பணி புரியும் கொரோனா எம்.ஆர்.பி. நர்சுகளுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பணி நிரந்தரம்
இதற்கு கொரோனா எம்.ஆர்.பி. நர்சுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நேற்று தமிழகம் முழுவதும் இருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட நர்சுகள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது, கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கொரோனாவுக்காக பணி அமர்த்தப்பட்ட நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்த கருத்தையும், பதாகைகள் மூலம் நர்சுகள் மேற்கொள்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமல்ஹாசன் ஆதரவு
இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இவர்கள் கொரோனா காலத்தில் செய்த சேவையின் பலனாக இன்றும் பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு உதவியாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா போராட்டம் முடிந்தது போன்ற தோரணை அரசுக்கு எழ தேவையில்லை. இன்னமும் கொரோனா இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கோரிக்கை நியாயமானது
எண்ணிக்கை குறைந்திருக்கலாம். அது அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது. தொற்று அதிகரித்தால் என்ன செய்வது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக அரசு யோசிக்க வேண்டும். எனவே நர்சுகளின் பணி முடிந்து விட்டது போல், இவர்களை சிதறடிப்பது நியாயம் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் நர்சுகளின் கோரிக்கை மிக நியாயமானது. இவர்களின் சேவை நமக்கு தேவை. எனவே இவர்களின் பணியை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்.ஒரு நல்ல அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். அதற்கு மாறாக, இருக்கும் வேலை வாய்ப்புகளை சிதறடிக்காது. எனவே அரசு கொரோனா எம்.ஆர்.பி. நர்சுகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் நர்சுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.