சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 49-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள கோவில்களில் நேற்று மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்களும் வருமாறு:-
மத்திய அரசுக்கு எதிரான கருத்து
கேள்வி:- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வருகிறதே?
பதில்:- அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், சட்டப்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- மத்திய அரசுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்து சொல்ல தொடங்கியுள்ளனர், இதற்கு காரணம் என்ன?
பதில்:- மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், தமிழக மக்கள் நலனுக்கு பாதிப்பு வரும்போது அதை தட்டிக்கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தினார். அவர் வழியில் நாங்களும் மக்களுக்கு பிரச்சினை உருவாக்கக்கூடிய திட்டங்கள், செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும், அதை திருத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம். அதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. யார் தவறு செய்தாலும், அதை தட்டிக்கேட்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.
கோவில் தீ விபத்து
கேள்வி:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு ஆக்கிரமிப்பு கடைகளே காரணம் என்று கூறப்படுகிறது, இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
பதில்:- தமிழக கோவில்களில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு என்ன காரணம்? என்ற விவரம் முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட மதுரைக்கு சென்றுள்ளனர். சென்னைக்கு வந்தவுடன் அவர்கள் அரசுக்கு உரிய விளக்கம் அளிப்பார்கள்.
கட்சி பொறுப்பு
கேள்வி:- அணிகள் இணைந்தபிறகும் உங்கள் ஆதரவு நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறதே?
பதில்:- அனைத்து மாவட்டங்களிலும் கட்சி கொள்கைகளுக்கு, சட்ட விதிகளுக்கு மாறாக நடந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் இன்னும் 2 மாவட்டங்கள் வர இருக்கிறது. அதுவும் முடிந்தபிறகு ஏற்கனவே உள்ள காலியிடங்கள் உள்பட அனைத்து காலியிடங்களுக்கும் உரிய நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
கேள்வி:- காவிரி விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கைகளை, கர்நாடக அரசு மறுத்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் கையாளாகாத தனம், என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?
பதில்:- டி.டி.வி.தினகரனுக்கு காவிரி வழக்கின் சரித்திரம் தெரியாது. காவிரி பிரச்சினையை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 17 ஆண்டுகள் அந்த வழக்கை விசாரித்து தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் பங்கீடு? என்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அந்த இறுதி தீர்ப்பின்படி தான் நமக்குள்ள உரிமைகளை கேட்பதற்காக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக அரசிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். நமக்கு ஒரு வருடத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். அதை மாதம் வாரியாக பிரித்து கொடுக்கவேண்டும். இன்றுவரை 81 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு பாக்கி இருக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் 7-ல் இருந்து 10 டி.எம்.சி. வரை தண்ணீர் இருந்தால் தான் அங்குள்ள பயிர்களை காப்பாற்ற முடியும். கபினி அணையில் போதுமான தண்ணீர் இருக்கிறது. இருந்தாலும் தற்காலிக ஏற்பாடாக 10 டி.எம்.சி. வரை தண்ணீர் தரவேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. அதனை கர்நாடக முதல்-மந்திரி மறுத்திருக்கிறார். எனவே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து மதுசூதனன் அளித்த புகார் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில்:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு உரிய விளக்கம் உரியவர்களிடம் இருந்து கேட்கப்பட்டு, அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா வழியில்...
கேள்வி:- ஜெயலலிதா எதிர்த்த சட்ட மசோதாக்களை, தற்போதைய தமிழக அரசு ஆதரிப்பதாக கூறப்படுகிறதே?.
பதில்:- ஜெயலலிதா இருக்கும்போது சில சட்டமசோதாக்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அது நீட் தேர்வு உள்பட எதுவாக இருந்தாலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, சில பிரிவுகள் நீக்கப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த கோரிக்கைகளும் சாத்தியமாகி இருக்கிறது. ஜெயலலிதா வழியில் தான் நாங்களும் சட்ட மசோதாக்களுக்கு ஆதரவு தருகிறோம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.