சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவகாமியம்மாள் என்பவர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பிறகு அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய மகன் பாலன் தாயின் உடலை சைக்கிளில் கட்டி 18 கிலோ மீட்டர் தள்ளிச் சென்றதாகவும் இன்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதித்தது மருத்துவமனை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழையெளிய மக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.