தமிழக செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்தது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த பிப்ரவரி 7-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிவதற்கான காரணத்தை தடாலடியாக வெளியிட்டார். அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியையும் இணைப்பதற் கான ரகசிய பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக் கப்பட்டது. தற்போது, இந்த 2 நிபந்தனைகளையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடித்தது. இரவு வரை ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். அதே நேரத்தில், திருவாரூரில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க.வில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பேச்சுவார்த்தைகள் மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இரு அணிகளும் இணையும் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறது. நிதித்துறை அமைச்சராக அவர் அறிவிக்கப்பட இருக்கிறார்.

அவரது அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது, பொதுப்பணித்துறை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் செம்மலைக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

கட்சி பதவியை பொறுத்தவரை, தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பு குழுவில், இரு அணியில் உள்ள நிர்வாகிகளில் இருந்து தலா 5 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.

அதன்பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியை விட்டு நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கிறது. அதன்பிறகே, கட்சியின் பொதுச்செயலாளர் யார்? என முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்