சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் 216-வது நினைவு நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய படத்துக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெரியகருப்பன், செந்தில்பாலாஜி உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நினைவுநாள் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தன்னலமற்ற பொதுச்சேவைக்கும், தனிச்சிறப்பான நாட்டுப்பற்றுக்கும் தகுதிமிக்க அடையாளமாக திகழும் தீரன் சின்னமலை அவர்களின் 216-வது நினைவு நாள். அவரது தீரம் அளப்பரியது; பெருமைக்குரியது. ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்து கைப்பற்றியபோது, சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று துணிச்சலாக சொன்னவர் அவர்.
இளைஞர்களின் எழுச்சி நாயகரான அவருடைய புகழ் பாடும் வகையில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான், அவருக்கு சென்னை கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் சேர்த்து கொங்குப்பகுதி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற உயரிய நோக் கில் வாய்ப்புகள் உருவாக்கியதும் கருணாநிதி தான்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்த நேரத்தில்தான், 31.7.2005 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்ன மலைக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கி, தூக்குக்கயிற்றை முத்தமிடும் நேரத் திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தீரத்தையும் நாட்டுப்பற்றையும் நாமும் பெறுவோம்.
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்கிடும் உறுதியுடன் தி.மு.க. அரசு தொடர்ந்து செயலாற்றும் என்று உறுதிகூறி வாழ்க அவரது புகழ் எனப்போற்றுகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவருடைய சிலை மற்றும் உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்படி, அ.தி.மு.க. சார்பில் சென்னை கிண்டி, தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, சிலையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவியும் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, மலர் வணக்கம் செலுத்தினார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதே போல், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.தங்கமுத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.