சென்னை,
சென்னையின் மத்திய பகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு தனியார் ஆஸ்பத்திரிகளை காட்டிலும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர், புறநோயாளிகளாவும், வெளிநோயாளிகளாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையினுடையை மருத்துவ பிரதேசமாக இந்த ஆஸ்பத்திரி திகழ்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. பொதுவாகவே நோயாளிகள் அதிகம் வரும் இடமாகவே ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இதனால், பலரும் ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது ஒருவித மன அழுத்தத்துடனே வருவார்கள். அந்தவகையில் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் நீருற்றுகள் அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், செயற்கை ஓவியங்கள் வரைதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை ஓமந்தூரர் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில், முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அழகான கண் கவர் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களை அங்கு வரும் நோயாளிகள் பார்க்கும் போது, அவர்களின் எண்ண ஓட்டங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்பத்திரி ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்த குமார் கூறியதாவது:-
உடல் பரிசோதனை மையம் என்பது ஒரு ஆஸ்பத்திரி போல் இல்லாமல், உள்ளே நுழையும் போது பொதுமக்களுக்கு மன அமைதியை கொடுத்து, மன அழுத்தத்தை குறைக்கும் சுற்றுச்சூழலாக இருக்க வேண்டும்.
அதனால், தான் இங்கு வரும் மக்கள் எல்லோருக்கும் ஆஸ்பத்திரி போன்ற சூழல் உருவாகாமல் இருப்பதற்காக, முழு உடல் பரிசோதனை மையத்தில் நீருற்றுகள், வண்ண விளக்குகள், மீன் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது அழகான சுவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இதனை பார்க்கும் பொதுமக்களுக்கு மன அமைதி, நிம்மதி கிடைக்கும். அப்போது டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்யும் போது, முடிவுகள் அனைத்தும் நல்லவிதமாக அமையும் என்ற திட்டத்தில் தான் இவை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கு முன்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் வார்டுகளிலும், இது போன்ற வண்ண சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த சுவர் ஓவியத்துக்கும் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.