சென்னை,
மிக்ஜம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனிடையே எண்ணெய் கசிவை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.
இந்த நிலையில், எண்ணெய் கசிவை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி எண்ணூர் கிரீக்கில் இருந்து எண்ணெய் கசிவை அகற்றுவதற்காக ஸ்கிம்மர் இயந்திரம் இன்று பயன்படுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் மேலும் 4 ஸ்கிம்மர் இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து எண்ணெய்யை உறிஞ்சி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்லும் பணியில் 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் உடல்நலத்தைப் பேண சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.