பென்னாகரம்:
நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
4-வது நாளாக நீடிப்பு
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 4-வது நாளாக நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது. அதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மேலும் பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 9-வது நாளாக தடை விதித்தது.
தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லை கடந்து மாறுகொட்டாய் வழியாக காவிரிஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.