சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்குப் பிறகு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:-
ஒலிம்பிக் அகாடமி
மாநிலத்தின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டை அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அழைப்பு சேவை மையம்
கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் சிறப்பு பழுதுபார்த்தல் பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் கையுந்துபந்து, கூடைப்பந்து ஆடுகளங்களுக்கு கம்பி வேலி அமைக்கும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மையம் தொடங்கப்படும்.
பராமரிப்பு பணிகள்
2021-22-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சுழல்நிதி ரூ.1 கோடியின் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் உள்ள ஆணையத்தின் புதிய அலுவலகத்துக்கான அடிப்படை வசதிகள் நிறுவுதல் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளின் அத்தியாவசியமான பராமரிப்பு பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
கிராமப்புற மக்களின் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகமானது அதன் உறுப்பு கல்லூரிகளின் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூலம் அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமப்புற பயிற்சித் திட்டத்தின்கீழ் உடற்தகுதி பயிற்சியை மேற்கொள்ளும்.
யோகா செயலி
யோகா மற்றும் தியானம் போன்ற பழங்கால பயிற்சி முறைகள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு வழிகோலும். மக்களின் நன்மைக்காக ஆசனங்கள் மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கியத்துக்கு யோகா என்னும் செயலி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.