சென்னை,
வங்க கடலில் உருவாகி தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. என்றாலும் இயற்கை சீற்றத்துக்கு முன்பு மனித சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கஜா புயல் நிரூபித்துவிட்டு சென்று இருக்கிறது.
இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
புயல் கரையை கடந்த போது கனமழை கொட்டியது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், சுமார் 600 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. சில துணை மின்நிலையங்களும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் சுமார் 16 ஆயிரம் குடிசைகள் மற்றும் வீடுகள் இடிந்தன.
நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நாசமானதாலும், கால்நடைகள் உயிர் இழந்ததாலும் விவசாயிகள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.
பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நாகை மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்த சில கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல் காட்சி அளிக்கின்றன.
புயல்-மழைக்கு 40-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் கணிசமான பேர் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் நிறைய பேர் இன்னும் முகாம்களிலேயே இருக்கிறார்கள்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி வருகிறார்கள். பெரிய மரங்களை அகற்ற பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.