சென்னை,
மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக் காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி இருப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பினார். பின்னர் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
தமிழகம் முழுவதும், ஆளும் அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தன்னுடைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போராட் டங்கள் நடந்தன.
இந்தநிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பஸ், ரெயில் மறியல் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த போராட்டத்தை முழு அளவில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று நடக்க இருக்கும் முழு அடைப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் ஒருமித்த வேண்டுகோளை ஏற்று, வியாழக்கிழமை (இன்று) நடைபெற உள்ள பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாட்டின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு எடுத்துரைப்பதற்காக தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல் 11-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அந்த போராட்டத்தை கைவிட்டு, இன்று நடக்க இருக்கும் முழுஅடைப்பில் பங்கேற்பதாக அந்த சங்கத்தின் தலைவர் த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழு அடைப்பு போராட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் வெற்றிகரமாக அமைய காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும். தமிழகமே ஸ்தம்பித்தது என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்து உள்ளது. அதன்படி இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது.
அதே நேரத்தில், ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. போலீசார் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சில ஆட்டோக்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா கூறுகையில்; இன்று மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல் இயங்கும். கூடுதல் போலீசார் ரெயில்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்து உள்ளன.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்து உள்ளது. பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போலீசாரின் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் போலீசார் ஆங்காங்கே தடுப்புவேலிகளை அமைத்து உள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் மின்சார ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற வன்முறை சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.