சென்னை,
கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவையும் மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.
மருத்துவ சேவைகள் பெறுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றாலும், சில நோயாளிகள் இந்த மாதிரியான நேரங்களில் வெளியே வரும்போது நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அவர்களுக்கு மருத்துவ சேவை தொடர்பான சில சந்தேகங்களை போக்குவதற்கும், சாதாரண மருத்துவ சேவைகளை நோயாளிகள் பெறுவதற்கும் வசதியாக இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு கிளை) சார்பில் டெலி மெடிசின் முறையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.
இதற்கு www.inst-a-c-l-i-n-ix.com என்ற இணையதள சேவைக்கு சென்று முகப்பு பக்கத்தின் ஓரத்தில் டெலி மெடிசின் என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில், நோயாளிகளின் சுயவிவரத்தை குறிப்பிட வேண்டும். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அந்த நோயாளிகளின் மருத்துவ சந்தேகங்களை டாக்டர்கள் தீர்த்து வைக்கின்றனர். முற்றிலும் இலவச சேவையாக இது வழங்கப்படுகிறது.
ஆன்லைன் வீடியோ மூலம் நோயாளிகளுக்கான பாதிப்பு என்ன? அவர்கள் இதுவரை எடுத்து வந்த மருந்துகள் எவை? என்பது குறித்து விளக்கமாக கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்குவதோடு, அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் விவரங்களையும் டாக்டர்கள் ஆன்லைனிலேயே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுகின்றனர்.
அதனை மருந்து கடைகளுக்கு எடுத்துச் சென்று நோயாளிகள் தங்களுக்கான மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் டாக்டர்கள் சுமார் 200 பேர் இந்த சேவையை வழங்க இதுவரை முன்வந்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருத்துவ சந்தேகங்களை இந்த இணையதளம் மூலமாக டாக்டர்கள் தீர்க்கின்றனர்.
இது உடனடி மருத்துவ சேவைக்கு மட்டும் தான் உதவும் என்றும், ஆனால் தீவிர சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் இந்த சேவையை வழங்கும் இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு கிளை) செயலாளர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் தெரிவித்தார். மேலும் அவர், இந்த திட்டம் தொடங்கி இதுவரை 450 பேர் பயன்அடைந்து இருப்பதாகவும் கூறினார்.