தமிழக செய்திகள்

புரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது - இணை ஆணையர் தகவல்

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.

தினத்தந்தி

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பல பரிசோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்கு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் புரட்டாசி மாத அமாவாசை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருகிறது என கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் கோவிலில் முடிகாணிக்கை மற்றும் தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்கவும். கோவிலுக்குள் தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு