தமிழக செய்திகள்

நீட் பிரச்சினையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு

நீட் பிரச்சினையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பில் ஈடுபட்டது.

சென்னை,

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நீட் தேர்வு முடிவால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:-

நீட் தேர்வு முடிவுகளை பார்த்த பிறகு, விழுப்புரம் மாவட்டம், பரவலூர் காலனியை சேர்ந்த, மிகவும் சாதாரணமான கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா என்பவர், மருத்துவராக வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு பொய்த்து போன நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அதே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, செஞ்சி அருகேயுள்ள மேல்சேவூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்பவர் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால், தற்கொலை செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வினால் கடந்தாண்டு அனிதாவை அநியாயமாக இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வெழுதிய பிரதீபாவை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ புரியவில்லை. நீட் தேர்வினால் ஏற்பட்ட தீவிரமான மன அழுத்தத்தில் அந்த மாணவி இருந்திருக்கிறார். கொடுமையான அந்தத் துயரத்தில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் மீளவில்லை.

ஆகவே, நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று இந்த அவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற, இந்த அரசு இதுவரை எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன? என்பதை முதல்-அமைச்சர் அல்லது அந்தத் துறையின் அமைச்சர், இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற, மத்திய அரசுக்கு தீவிரமான அழுத்தத்தை இந்த அரசு உடனடியாக தந்தாக வேண்டும். எனவே, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதா எங்கே இருக்கிறது?. ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதா?. தெரியவில்லை. அரசு அறிவித்த கோச்சிங் சென்டரும் பயன் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தான் இந்த அரசின் கொள்கை. சட்ட போராட்டம் நடத்தி கடுமையாக போராடினோம். அதன் அடிப்படையில் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தையும் நிறைவேற்றினோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை வலியுறுத்தினோம். என்றாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் இங்கே வலியுறுத்தி பேசுகிறார்களே?. நளினி சிதம்பரம் தான் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக வாதாடினார்.

தமிழக அரசின் சட்ட மசோதா எங்கே இருக்கிறது, எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். உங்களிடத்திலேயே இருக்கிறது. இந்த நீட் தேர்வை கொண்டு வர கொள்கை முடிவை எடுத்தது காங்கிரஸ். அந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தது. இந்த உண்மையை மறைக்க முடியுமா?.

அமைச்சர் செங்கோட்டையன்:- நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் போராடி வருகிறோம். மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை. மாணவர்களுக்கு பயிற்சி மையங்களை ஏற்படுத்தி பயிற்சி கொடுத்ததால் தான் இன்றைக்கு தமிழகத்தில் அதிக மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- ஏதோ மத்தியில் இருந்த ஆட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது என்று சொல்லி, அதை தவறான வகையில் பதிவு செய்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். மத்தியில் இருந்த ஆட்சியில் கூட்டணியில் இருந்தது உண்மைதான். ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்திருந்தாலும், 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி இருந்த நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைய விடாமல் நாங்கள் பார்த்துக்கொண்டோம். அதை அவர் மறுக்க முடியுமா?.

நான் கேட்கிற ஒரு கேள்வி, இதே சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து, இதற்காக இரு மசோதாக்களை நிறைவேற்றி, அது அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள், அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறதா? வந்திருக்கிறதா?, என்றெல்லாம் கேலி செய்யக்கூடிய அளவுக்கு பேசிய செய்திகள் எல்லாம் வெளியாகின. ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதா? அது வந்ததா?, என்றெல்லாம் மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் பேசக்கூடிய நிலை வந்தது.

எனவே, இந்த சூழ்நிலையில், கடந்தாண்டு ஒரு மாணவி, இந்தாண்டு ஒரு மாணவி என இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். எனவே, நான் கேட்ட அந்தக் கேள்வியை அடிப்படையாக வைத்து, அமைச்சர் அளித்த பதில் எங்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால், அவருடைய பதிலை கண்டித்து தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்