சென்னை,
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள் அடங்கும்.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு 27-ந் தேதி (முதல் கட்டம்) நடக்கிறது.
158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு 30-ந் தேதி (2-ம் கட்டம்) நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த மாவட்டங்களில் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி (நேற்று) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கடந்த 14-ந் தேதி வரையில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகின. 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் அன்றைய தினம் மனு தாக்கல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் போட்டி போட்டு மனு அளித்தனர். இதனால் வேட்புமனு பெறப்பட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தை கடந்தும் மனு தாக்கல் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 7 நாட்களாக (15-ந் தேதி தவிர்த்து) நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி நாள் மட்டும் மலைபோல் மனுக்கள் குவிந்தன. வழக்கமாக இரவு 8 மணிக்குள் வேட்புமனு தாக்கல் குறித்த நிலவரங்கள் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படும்.
ஆனால் நேற்று இரவு 10 மணியை கடந்தும் வேட்புமனு தாக்கல் குறித்த நிலவரங்கள் வெளியிடப்படவில்லை. எனவே, எத்தனை பேர் மனு தாக்கல் செய்தார்கள் என்பது மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது தான் தெரியவரும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள், விதிகளை முறையாக பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களுடைய மனுக்களை திரும்ப பெறுவதற்கு 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
27-ந் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 30-ந் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் 6-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது.