மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பொதுமக்கள் இந்த நாளில் புண்ணியத்தலங்களுக்கு சென்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணம் செய்வார்கள். பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் தர்ப்பண நிகழ்வுகள் அதிகம் நடத்தப்படுகிறது.
வழக்கமான அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி மகாளய அமாவாசையான நேற்று தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று கடலூர் சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் காலை 7 மணி முதலே குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்ப்பணம்
பின்னர் அவர்கள் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, எள், பழம், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அங்கு முன்கூட்டியே ஏராளமான புரோகிதர்கள் வந்து அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை கொடுத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்காக கடற்கரையிலும் காய்கறிகள், பழங்கள், வாழை இலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றங்கரைகளிலும், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது.