சேலம்,
சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்ன? என்பதை கண்டறிந்து தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சில தலைவர்கள் இந்த அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது அவரது காலத்தில் இந்த மக்களுக்கு என்ன செய்தார்? என்ன திட்டங்களை கொண்டு வந்தார்?. வன்னிய சமுதாயத்தை சேர்ந்த கொடையாளர்கள் அரசுக்கு தானமாக வழங்கிய சொத்துகளை முறையாக பாதுகாக்க முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
வன்னிய சமுதாயத்துக்காக பாடுபட்ட ராமசாமி படையாச்சியாருக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளேன். வன்னிய மக்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
ஆனால் சிலர் வேண்டும் என்றே அரசியல் காரணங்களுக்காகவும், சுயலாபத்திற்காகவும் இந்த அரசு மீது விமர்சனம் செய்கிறார்கள். அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தவிர அரசின் திட்டங்கள் மீது எந்த குறையும் சொல்லமுடியாது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் விளைவாக தற்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 3 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 32 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.