கடலூர்,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ரம்யா (வயது 22). எம்.எஸ்சி., படித்துள்ள இவர், குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஸ்ரீகாயத்ரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
ரம்யா கடந்த 2017-ம் ஆண்டு கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பஸ்சில் வந்து சென்றபோது, அவரை விருத்தாசலம் விருத்தகிரிக்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (23) என்பவர் காதலித்து வந்தார். ஆனால் இவரது காதலை ரம்யா ஏற்க மறுத்துவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று பெண் கேட்டுள்ளார்.
அப்போதும் திருமணத்திற்கு ரம்யா சம்மதிக்கவில்லை. இதனால் ராஜசேகர் ரம்யா மீது ஆத்திரத்தில் இருந்தார்.
கடந்த 22-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு ரம்யா பணிக்கு சென்றார். அப்போது பள்ளிக்குள் புகுந்த ராஜசேகர் அங்குள்ள ஆசிரியர்கள் அறையில் இருந்த ரம்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து ராஜசேகரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே ராஜசேகர் தனது அக்காள் ஒருவருக்கு, நான் சாகப்போகிறேன் என்று குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ராஜசேகரின் செல்போன் சிக்னல் மூலம் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு பகுதியில் ராஜசேகரின் செல்போன் சிக்னல் காண்பித்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, தொப்பையான்குளம் கிராமத்தில் கிடந்த ராஜசேகரின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
இந்த நிலையில் நேற்று காலை சேந்தநாட்டில் உள்ள முந்திரி தோப்பில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். அது ராஜசேகரின் உடல் என்பது தெரியவந்தது. ஒரு தலைக்காதலால் ஆசிரியை ரம்யாவை கொன்ற ராஜசேகர், போலீசார் தேடுவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.