சென்னை,
ஆன்லைன் முதலீடு செயலி மூலம் மோசடி நடப்பதால், பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-
சமூகவலைதளங்கள் வாயிலாக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு பண ஆசை காட்டி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். குறைந்த முதலீடு, அதிக லாபம் என்று ஆசையை தூண்டுகிறார்கள். அந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வெளியிடாமல், ஆன்லைன் செயலி மூலம் பணம் கட்டச்சொல்வார்கள்.
பெரிய அளவில் பணம் கட்டச்சொல்லி பின்னர் ஏமாற்றி விடுவார்கள். இவ்வாறு பணத்தை கட்டி ஏமாந்த 34 பேர் புகார் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
இது போன்ற ஆன்லைன் முதலீடு செயலியை நம்பி பொதுமக்கள் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை எனது வேண்டுகோளாகவும் வைக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.