தமிழக செய்திகள்

டி.டி.வி.தினகரனை அனுசரித்து சென்றால் தான் ஆட்சி நீடிக்கும்

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் சூழல் வந்தால் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க. அரசு சோதனைக்கு மேல் சோதனை மற்றும் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் எங்களுடைய நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்த, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பரோல் குறித்து சட்டமன்றத்தில் நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கியதற்காக நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக நேரில் சந்தித்தும் நன்றி தெரிவிக்க உள்ளோம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதம் பார்க்காமல் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்த இருக்கிறோம்.

அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் எங்களுடைய நிலைப்பாடு குறித்து விவாதித்தோம். பொதுச்செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனையும் நிராகரிக்கவேண்டும் என்ற பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகிவிடக்கூடாது. பா.ஜ.க.வின் சூழ்ச்சியை நிராகரித்துவிட்டு, தமிழ்நாட்டின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மக்கள் இயக்கமான அ.தி.மு.க. வலிமையாக இருக்கவேண்டும்.

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டி.டி.வி.தினகரனை அழைத்து பேசவேண்டும். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேசி, அவர்களுக்கும் ஆட்சிகட்சியில் உரிய பங்கை கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இதனையே தோழமை கட்சி என்ற அடிப்படையில் அவர்களுக்கு நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் சூழல் வருமானால் அடுத்தகட்டமாக கூடி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்