சென்னை,
தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வு அறிவிப்புக்கு பிறகு, மக்களின் கவனம் வெகுவாகவே ரெயில் போக்குவரத்து மீது திரும்பி இருக்கிறது. பாதுகாப்பான பயணம் என்ற வகையில் ஏற்கனவே ரெயில்களில் கூட்டம் அலைமோதும் சூழ்நிலையில், தற்போது கூடுதலாக மக்கள் பார்வை பதிவதால் ரெயில் நிலையங்களில் தேன் கூட்டில் மொய்த்திருக்கும் தேனீக்கள் போல பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்தில் 60 சதவீத தேவையை மின்சார ரெயில்களே ஈடுசெய்து வரும் நிலையில், பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில் பயணமே பிரதானம் என்ற ரீதியில் சென்னை நகர மக்கள் உள்ளனர். மெட்ரோ ரெயில்களில் கட்டணம் அதிகம் என்பதாலும், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட மிக மிகக் குறைவு என்பதாலும் மின்சார ரெயிலிலேயே தங்களது பயணத்தை சென்னை நகரவாசிகள் அமைத்து வருகின்றனர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் வழக்கமான நாட்களை காட்டிலும் கூடுதலாக பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், கூடுதல் வருவாய் கிடைத்து வருவதாகவும் தெற்கு ரெயில்வே சார்பிலும் அவ்வப்போது தகவல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வழக்கமான நாட்களை காட்டிலும் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி தெற்கு ரெயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் கடற்கரை, கோட்டை, பூங்காநகர் மார்க்கமாக செங்கல்பட்டு மற்றும் திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில், பராமரிப்பு காரணமாக 4-ந்தேதி (நேற்று) பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
விடுமுறை நாள் என்பதாலும், முன்கூட்டி வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பதாலும் பயணிகள் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டோம்? என்று தெற்கு ரெயில்வே நிர்வாகமே யோசிக்கும் அளவுக்கு நேற்றைய பாதிப்பு இருந்தது.
சென்னையின் முக்கியமான மின்சார ரெயில் நிலையங்கள் எனப்படும் கடற்கரை, கோட்டை மற்றும் பூங்காநகர் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டதால், எழும்பூர் நோக்கி பயணிகள் படையெடுத்தனர். இதனால் விடுமுறை தினமான நேற்று வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மிகுதியாகவே இருந்தது.
முக்கியமான ரெயில் நிலையங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து, கடற்கரையில் இயக்கப்பட வேண்டிய அனைத்து மின்சார ரெயில்களும் எழும்பூரில் இருந்தே இயக்கப்பட்டன. அதைப்போல் செங்கல்பட்டில் இருந்து வந்த அனைத்து மின்சார ரெயில்களும் எழும்பூரில் நிறுத்தப்பட்டன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைக்கு மாறாக, நேற்று மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலும், நீண்ட நேர இடைவெளியிலும் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசல் காரணமாக டிக்கெட் கூட எடுக்க முடியாமல் பயணிகள் தவித்து போய்விட்டனர்.
இதனால் கடற்கரை-செங்கல்பட்டு, தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-எழும்பூர், தாம்பரம்-எழும்பூர் இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவ்வப்போது வந்த சில மின்சார ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்து ஏறினர். வழக்கமான நெரிசலை விட, இன்னும் அதிகமாக அதாவது காற்றுகூட புகுந்துவிட முடியாத அளவுக்கு சிறிதும் இடைவெளியின்றி பயணிகள் ரெயில்களில் நிற்பதை பார்க்க முடிந்தது.
அதேவேளையில் திருவான்மியூர்-கடற்கரை இடையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் அந்த வழித்தடத்தில் வரும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். மின்சார ரெயிலுக்காக நடைமேடையிலும், நடைமேம்பாலங்களிலும் ஈக்கள் போல பயணிகள் மொய்த்திருந்தனர். ரெயிலுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பயணிகள் காத்திருப்பதற்கும் ஒரு அளவு உண்டு என்ற ரீதியில் ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் ரெயில் நிலையங்களை விட்டு திட்டியபடி வருவதையும் காண முடிந்தது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெளிமாநில ரெயில்களை பிடிப்பதற்காக செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கிச் செல்வது வழக்கம். இந்த பயணிகளும் நேற்று பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குடும்பத்தினருடன் வந்த ஏராளமானோர் உரிய நேரத்தில் ரெயில்களை பிடிக்க முடியாமல் தவறவிட்டனர்.
மின்சார ரெயில்களில் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் பஸ் நிலையங்களில் பயணிகள் காத்திருக்க தொடங்கினர். இதற்கிடையில் பயணிகளின் தேவையை பயன்படுத்தி ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் களத்தில் குதித்தன. விரைவாக செல்ல எண்ணி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களை நாடும் பயணிகளுக்கு அவர்கள் சொல்லும் கட்டணம் கூடுதல் வேதனையாகவே அமைந்தது. எனினும் கூட்ட நெரிசலில் முண்டியடித்து செல்ல பயந்து பெரும்பாலானோர் ஓரளவு பேரம் பேசி ஆட்டோக்களை பயன்படுத்தினர்.
ஆன்-லைன் மூலம் ஆட்டோ மற்றும் கார்களுக்கான முன்பதிவு அதிகமாக அமைந்தது. அந்தவகையில் வழக்கமான விடுமுறை நாட்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக ஆன்-லைன் மூலம் பயண சேவைக்கான முன்பதிவு இருந்தது. அதேவேளையில் நேற்று நகரின் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது.
மின்சார ரெயில் சேவை பாதிப்பு நேற்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாதிப்பு நேரம் நேற்று கூடுதலாகவே அதாவது பிற்பகல் 3 மணி வரை இருந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல தயாராக இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பஸ் கட்டண உயர்வு என்று தொடர்ந்து அவதிப்பட்டு வந்த பயணிகள் தற்போது மின்சார ரெயில்கள் மூலமும் அவதிப்பட தொடங்கி உள்ளனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு எங்களுக்கு மின்சார ரெயில்கள் தான் ஆறுதலாக இருந்தது. பராமரிப்பு பணி மேற்கொள்வது சரிதான். அதை இரவு நேரங்களில் செய்யலாமே... அதைவிடுத்து முகூர்த்த நாளான இன்று (நேற்று) அதுவும் இத்தனை மணி நேரங்கள் மின்சார ரெயில் சேவையை நிறுத்துவது சரியான நடைமுறை ஆகாது.
அதேவேளையில் ரெயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை என்பதால் நேற்று குறைவான டிக்கெட் கவுண்ட்டர்களே திறக்கப்பட்டு இருந்தன. இதனால் டிக்கெட் வாங்கவே பல மணி நேரம் நாங்கள் வரிசையில் நிற்கும்நிலை உருவானது. தானியங்கி டிக்கெட் கவுண்ட்டர்களும் செயல்படவில்லை. அவசர காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை கையாள ரெயில்வே நிர்வாகம் தவறிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.