தமிழக செய்திகள்

தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் ஏற்பட நல்ல சந்தர்ப்பம் - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் ஏற்பட இது நல்ல சந்தர்ப்பம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியின்போது கூறியதாவது:-

தினத்தந்தி

சென்னை,

எனக்கு ஒரு மாற்று அரசியலை கொண்டு வரவேண்டும், இங்கு ஒரு அரசியல் மாற்றம் வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குபவன் தான் ஒரு நல்ல தலைவன்.

பேரறிஞர் அண்ணா நான் மிகவும் மதிக்கத்தக்க ஒருவர். அவர் எத்தனை தலைவர்களை உருவாக்கினார். தம்பி வா தலைமை ஏற்க வா என்று சொன்னார். அவர்கள் உருவாக்கிய தலைவர்களிடம் தான், இவ்வளவு காலம் ஓட்டிக் கொண்டு இருந்தோம். இப்போது அப்படி யார் இருக்கிறார்கள்? எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்?. எல்லாரும் வெளிச்சத்துக்கு இன்னும் வரவில்லை. அவர்களை கொண்டு வர வேண்டும்.

வெளிநாடுகளில் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா? கொஞ்சம் நம்பிக்கை கிடைத்தால் போதும் கோடி, கோடியாக சம்பாதிப்பதை விட்டுவிட்டு இங்கே வர தயாராக இருக்கிறார்கள். நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவர்களை இங்கே கொண்டு வர வேண்டும்.

கட்சி ஆரம்பித்து, தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியதை இப்போது ஏன் சொல்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். இது ஒரு யுக்தியா? நினைவில் இருந்து வரும் யுக்தி அல்ல. மனதில் இருந்து வரும் யுக்தி அது. உண்மை, வெளிப்படைத்தன்மை. தன்னலம் இல்லாதது. உண்மைக்கு ஒரு சக்தி இருக்கிறது. தன்னலத்துக்கு ஒரு சக்தி இருக்கிறது. இந்த கொள்கையை சொன்ன பிறகு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

கட்சியை டெல்லிக்கு சென்று பதிவு செய்து, பெரிய மாநாடு நடத்தி கொடியை அறிமுகம் செய்து, கொள்கைகளை தெரிவிக்கிறோம். சொன்ன பிறகு, தேர்தலில் நின்று தான் ஆக வேண்டும். நாம் எதிர்ப்பது யாரை? 2 ஜாம்பவான்களை எதிர்க்கிறோம். அவர்கள் அசுர பலத்தோடு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் கிடையாது. மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். வாழ்வா? சாவா? என்ற நிர்பந்தம். பண பலம், ஆள் பலம், கட்டமைப்பு, எந்த யுக்தி வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களை எதிர் கொள்ளவேண்டும்.

இன்னொரு பக்கம் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு குபேரனின் கஜானாவையே கையில் வைத்துக்கொண்டு முழு கட்டமைப்புடன் காத்திருக்கிறார்கள். இவர்கள் நடுவில் சினிமா புகழை வைத்துக்கொண்டு, நம்ம ரசிகர்களை வைத்து கொண்டு ஜெயிக்க முடியுமா?. இந்த கொள்கைகளை அப்போது சொன்னால், எடுபடவில்லை என்றால், உங்களையெல்லாம் பலிகடா ஆக்கிவிடமாட்டேனா?.

என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கியது போல் ஆகிவிடும். தேர்தல் என்ன சாதாரண விஷயமா? எவ்வளவு பணம் செலவு செய்து, பொண்டாட்டி தாலியை விற்று, வீடு விற்று வருவான். அவனை பலிகடா ஆக்குவதா?. இந்த வயதில் அது எனக்கு தேவையா? எனவே முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.

இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நாம் ஒதுங்கிடலாம் என்று நினைத்தால், அரசியலில் என்ன சொல்வார்கள்? அரசியலுக்கு வரேன்னு சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார். இது ஒரு சாக்கு. பல பேர் பலவிதமாக பேசுவார்கள். கோழை என்று சொல்வார்கள். பயந்துவிட்டார் என்று சொல்வார்கள். அந்த கெட்டபெயர் வேண்டாம் என்று நினைத்து தான் இதையெல்லாம் பண்ணிட்டு இறங்கலாம் என்றால் கூட, இது போல் சந்திக்க வேண்டி இருக்கிறது.

இப்போது என்ன செய்வது? முதலிலேயே மக்களிடம் அதைப் பற்றி சொல்லிவிட வேண்டியது தான். அய்யா இப்படி இருக்கு. உங்களுக்காக நான் வருகிறேன். பெரிய வெற்றிடம் இருக்கிறது. மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. 2 பெரிய ஆட்கள் கிடையாது. மிகப்பெரிய ஆளுமைகள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லை. தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேரும், 70 சதவீதம் பேர் கருணாநிதிக்காகவும்தான் ஓட்டுபோட்டார்கள். அதேபோல், அ.தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேரும், ஜெயலலிதாவுக்கு 70 சதவீதம் பேரும் வாக்களித்தார்கள்.

இப்போது இந்த 2 மிகப்பெரிய ஆளுமைகள் இல்லை. இதுதான் வெற்றிடம்.

54 ஆண்டுகளாக இருந்து வரும் ஆட்சிகளை அகற்றுவதற்கு இதுதான் நேரம். மக்கள் யோசிக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை மக்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு இயக்கம் மூலம் எழுச்சி உண்டாக வேண்டும்.

ஜனங்கள் மத்தியில் அப்படி உண்டானால் இந்த ஜாம்பவான்கள், அசுர பலம், பணம், ஆட்கள் பலம், சூழ்ச்சி எதுவும் நிற்காது. அனைத்தும் தூள், தூளாக போய்விடும். அதைத்தான் விரும்புகிறேன். அந்த அலை, அந்த இயக்கம், எழுச்சி உருவாக்க வேண்டும். அது உருவாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து