நாலாட்டின்புத்தூர்:
வானரமுட்டி பஞ்சாயத்து துணை தலைவர் லட்சுமி மாரியப்பன், முன்னாள் துணை தலைவர் ராமர், வானரமுட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். அங்கு உதவி கலெக்டர் இல்லாததால், அவரது நேர்முக உதவியாளர் இசக்கியிடம் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்லூரணி, முத்துச்சாமிபுரம், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது கோவில்பட்டி தாலுகா பாரதி நகர், பசுவந்தனை ரோடு 7-வது தெரு என்ற முகவரியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை வானர முட்டி - தோணுகால் சாலையில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் கோவில்கள் இருப்பதால் சமுதாய ஒற்றுமை சீர்குலைத்து விடும். பள்ளிக்கூடம் முடிந்து அப்பகுதி சாலை வழியாக செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து கோவில்பட்டி தாசில்தார் சுசிலாவிடமும் மனு கொடுத்தனர்.