சென்னை,
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக தேர்தலுக்காக தானே காவிரி பிரச்சினையில் இந்த தாமதம் என்ற உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை காட்டும் எதிர்க்கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவோம் அதற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் சித்தராமையாவை ஏன் கண்டிக்கவில்லை? இந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. ஏன் சொல்லவில்லை?.
ஆக கூட்டணிக்காக காவிரி பிரச்சினையை நீங்கள் பாரபட்சமாக அணுகுறீர்கள் என்று மு.க.ஸ்டாலினை குற்றம் சாட்டுகிறோம், இது சட்ட ரீதியான நகர்வுகள் இருக்கும்போது மத்திய அரசு கேட்டிருக்கும் நியாயமான விளக்கம் கேட்ட வழக்கு 9ந் தேதி வருகின்ற நிலையில் நாளொரு போராட்டத்தை நடத்துவது அரசியல் சுயலாபம், இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக வஞ்சனை செய்த கட்சிகளே இன்று போராடுகிறார்கள். ஆனால் உண்மையான தீர்வு காணவில்லை. நம் உரிமை சில நாட்கள், சில வாரங்களுக்குள் கிடைத்து விடும் என்பது தான் உண்மை. உரிமை கிடைத்து விடும், ஆனால் அது கிடைக்கக் கூடாது என்றும் கிடைத்தால் சொந்தம் கொண்டாடுவதற்குமான சுயநல அரசியலே இது.
இன்னும் சில தினங்களுக்குள் கிடைக்க வேண்டிய உரிமையை நிரந்தர தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நெடு நாளைய பிரச்சினையை நிரந்தரமாக தண்ணீர் கிடைக்காது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்து மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கும் கட்சிகளை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.