மதுரை,
மதுரை நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் மீட்டு வருகின்றனர்.
மதுரையில் விபத்துக்குள்ளான மேம்பாலம் விசாரணைக்கு பிறகு தரமில்லை என தெரியவந்தால் உரிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மேம்பால விபத்து ஏற்பட்டுள்ளது. பணியில் பயன்படுத்திய இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும்.
உரிய பயிற்சி அளிக்கப்படாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேம்பாலப்பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆட்சியர் முடிவு செய்வார்.