சென்னை,
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக சென்னையில் பிரதான மருத்துவமனைகளாக விளங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் சொற்ப அளவிலான படுக்கைகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த சூழலில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கூடுதலாக 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், 5 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ் சேவையையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் பலர் ஆம்புலன்சுகளிலேயே உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.