சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பரவல் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போது பாதிக்கப்படும் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறல் காரணமாக அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஆக்சிஜன் அளவு குறைய குறைய, லாரிகள் மூலம் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 40 கி.லி கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் டேங்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 19 கி.லி கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 36 கி.லி கொள்ளளவு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 34 கி.லி கொள்ளளவும் கொண்ட ஆக்சிஜன் டேங்குகள் உள்ளன.
டி-டைப் சிலிண்டர்கள்
வார்டில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜனை நேரடியாக குழாய் மூலம் டேங்கில் இருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆக்சிஜன் சப்ளையில் கோளாறு அல்லது ஆக்சிஜன் கிடைப்பதில் வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலையில், அவசர நிலையை சமாளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், முன்னெச்சரிக்கையாக தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் பெரும்பாலும் பெரிய சிலிண்டர்கள் (டி டைப் சிலிண்டர்கள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆக்சிஜன் நிரப்பி அவசர தேவைகளுக்கு பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 324 டி-டைப் சிலிண்டர்களும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 152 சிலிண்டர்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 130 சிலிண்டர்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுமார் 150 சிலிண்டர்களும் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
5 மடங்கு அதிகரிப்பு
சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க அனைத்து மருத்துவமனைகளிலும், மயக்கவியல் துறை தலைவர் தலைமையிலான குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் தேவை குறித்து மயக்கவியல் துறை தலைவர் ஒருவர் கூறியதாவது:-
பெரும்பாலான கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் அனுமதிக்கப்படுவதால், ஆக்சிஜன் தேவை அனைத்து மருத்துவமனைகளிலும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கி.லி முதல் 2 கி.லி ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஆக்சிஜன் தேவை 5 மடங்கு உயர்ந்து நாள் ஒன்றுக்கு 10 கி.லி வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை தடை இல்லாமல் கிடைக்க இரவு-பகலாக கண்விழித்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.