தமிழக செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தியை இன்றோடு நிறுத்திக் கொண்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரியிருந்தது.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து அனுப்பும் பணிகளையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனும் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த அனுமதி ஜூலை 31 ஆம் தேதி (நாளை) முடிவடைகிறது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி நாளையுடன் முடிவடைவதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை இன்றுடன் நிறுத்திக் கொண்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்