ராஜபாளையம்,
ராம்கோ தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ராஜபாளையம் வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சி.பி.ஐ. சோதனை
தி.மு.க. தன்னை வளர்த்து கொள்ளும் முயற்சிகளில் இறங்குகிறது. அவர்கள் ஆட்சி காலத்தில் தவறுகளே நடக்காதது போல் புதிய பார்வையோடு, புதிய பயணம் போவது போல தோற்றம் கொடுக்கின்றனர்.
ப.சிதம்பரம் உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தனி அதிகாரம் பெற்ற சி.பி.ஐ. அவர்களே முடிவெடுத்து சோதனை செய்கிறார்கள். சி.பி.ஐ. செயல்பாட்டில் மத்திய அரசு எப்போதும் தலையிடுவது இல்லை. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரிவு அவர்களது பிரச்சினை. மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு அழைத்து பேச வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. பா.ஜனதாவுக்கு வந்தால் அதை விட மகிழ்ச்சி.
கல்வித்தரம்
மாணவர்களை முட்டாளாக்கும் வேலையை தமிழக அரசியல் கட்சியினர் செய்ய வேண்டாம். 50 வருடங்களாக மாணவர்கள் வாழ்க்கை பாழடிக்கப்பட்டுவிட்டது. அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்களை நியமிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாராக இல்லை. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளை நாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.