ஜம்மு,
காஷ்மீரில் ஆர்.எஸ். புரா செக்டரில், எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். அத்துடன் சரமாரியாக குண்டுகளையும் வீசினர். சிறிய ரக பீரங்கி தாக்குதலும் நடந்தது.
12-க்கும் மேற்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய தரப்பிலும் எல்லை பாதுகாப்பு படையினரால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தாக்குதலை எதிர்த்து வீரமுடன் சண்டையிட்ட எல்லை பாதுகாப்பு படையின் தலைமைக்காவலர், சுரேஷ் வீர மரணம் அடைந்தார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
நேற்று காலை 6 மணிவரை நடந்த சண்டையில் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களும் பாதிப்புக்கு ஆளாகின. பிண்டிசார்க்கான் என்ற கிராமத்தில் 14 வயது சிறுமி பலி ஆனார். அவர் அங்கு உள்ள தனது தாய்மாமா வீட்டுக்கு வந்திருந்த நிலையில், பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
பாகிஸ்தானுடன் தீரமுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பண்டார செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 42. அவரது பெற்றோர் அய்யாசாமி, சாலம்மாள் ஆவர்.
திருமணமான சுரேசுக்கு ஜானகி (31) என்ற எம்.ஏ., பி.எட்., பட்டதாரி மனைவியும், புன்னகை (13) என்ற மகளும், ஆதர்ஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.
ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தின் காரணமாக சுரேஷ் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் தாக்குதலை எதிர்த்து சண்டையிடப்போவதற்கு முன்பு அவர் செல்போனில் மனைவியிடம் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
குடியரசு தின விடுமுறையில் ஊருக்கு வர இருந்ததாக அவர் கூறியதாகவும் தெரிகிறது.
பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுரேஷ் உடல் விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கோவை வந்து அங்கு இருந்து கார் மூலம் சொந்த ஊரான பண்டார செட்டிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கிறது.
சுரேஷ் மரணம் அடைந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மீளாத்துயரத்தில் உள்ளனர். அவர்களது உறவினர்களும், நண்பர்களும் வந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் டூப்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். ஒடிசாவை சேர்ந்த இவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பொதுமக்களில் 6 பேர் சிக்கி காயம் அடைந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. 2 பீரங்கி நிலைகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நிர்மூலம் ஆக்கினர்.
இந்திய தரப்பின் தாக்குதலில் சியால்கோட் செக்டாரில் பர்வீன்பீவி, ஆயிஷா என்ற 2 பெண்கள் உயிரிழந்து விட்டதாகவும், பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.