தமிழக செய்திகள்

பழனியில் நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்; மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்

பழனியில், நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம் நடந்தது. திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பழனி,

திருமணம்

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், நடிகருமான வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.-ஜெகதா தம்பதியின் மகள் சிவநந்தினிக்கும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சித்தநாதன் சன்ஸ் உரிமையாளர் ரவீந்திரன்-சாந்தி தம்பதியின் மகன் தினேஷ்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் பழனியில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடிதத்தை மு.க.ஸ்டாலின் வாசித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில், சென்னையில் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சந்திரசேகர் விரும்பி இருப்பார். தலைவரின் உடல்நிலை சரியில்லாததால் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று நினைத்து பழனியில் திருமணத்தை வைத்துள்ளார். மணமக்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழவேண்டும். உங்களுடைய பெற்றோர் எந்த கொள்கை, லட்சியத்திற்காக வாழ்ந்தார்களோ, அதை பின்பற்றி வாழவேண்டும்.

நான் திருமணம் செய்யும்போது நாம் இருவர், நமக்கு மூவர் என்று குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் செய்தார்கள். பின்னர் நாம் இருவர், நமக்கு இருவர் என்றார்கள். தற்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று கூறுகிறார்கள். சமீபத்தில் ஓரிடத்தில் நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை என்ற வாசகத்தை பார்த்தேன். எதிர்காலத்தில் அதையும் சொல்லக்கூடும். நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாடு பிரசாரம் செய்யப்படுகிறது.

முன்பு மணமக்களை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பார்கள். அதை 16 குழந்தைகள் என நினைக்க தொடங்கி விட்டனர். இதனால் பலரும் இப்போது அவ்வாறு வாழ்த்துவது இல்லை. மணமக்களை வாழ்த்தும்போது பதினாறு என்பது, 16 வகையான செல்வங்களேயே குறிக்கும். எனவே, மணமக்கள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள்-நடிகர்கள்

திருமண விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ., கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, ராதாரவி, நெப்போலியன், தியாகு, இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.