தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சி வெறியப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதுவும் ஒரு வீட்டுக்கு 5 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வைகை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றும், அதுவரை டிராக்டரில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.