தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நாளை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டிகளை 12-ந் தேதி (அதாவது நேற்று) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போட்டிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம், கடலூர் ஆகிய கல்வி மாவட்டத்திற்கு 25 பேர் வீதம் 50 பேர் என 2 போட்டிகளுக்கு (கட்டுரை, பேச்சுப்போட்டி) 100 பேரை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அனுமதி மறுப்பு
இதையடுத்து கடலூர் சி.கே. பள்ளியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 2 போட்டிகளிலும் மொத்தம் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில தனியார் பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 25 மாணவர்கள் வீதம் வந்திருந்தனர். இதனால் மொத்தம் 100 மாணவர்களுக்கு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்தனர். இதை பார்த்த தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 50 பேரை மட்டுமே போட்டிக்கு அழைத்துவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அறிவிப்பாணையை சரியாக கவனிக்காமல், ஒவ்வொரு பள்ளிக்கும் 25 பேர் வீதம் அழைத்து வந்தால் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
வாக்குவாதம்
அப்போது மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த முதன்மை கல்வி அலுவலர் பழனி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.