தமிழக செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்: முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நேற்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்காக ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளரும், மக்களவைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ் மற்றும் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், என்.ஆர்.இளங்கோ, வில்சன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு அஞ்சலி

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்? என்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வேளாண் சட்டங்கள் ரத்து, நீட் தேர்வு விவகாரம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கொரோனா நிலவரம், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

"குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத" 3 வேளாண் சட்டங்களை முதலில் அவசர சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோதும் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், மாநிலத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளை அரவணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன், தி.மு.க. இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது.

ரத்து செய்ய வேண்டும்

அகில இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று ஜனாதிபதியை சந்தித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுமாறு மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி 28.8.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே தீர்மானத்தை முன்மொழிந்து, நிறைவேற்றினார்.

இந்த நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் மோடிக்கு, விவசாயிகளின் பலத்தை உணர்த்தி - இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிரான இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயிகளுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பினை முன்னெடுத்து சென்று, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த கூட்டம் மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்