மதுரை,
மதுரையில் நாளை கொண்டாடப்பட உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் கிளம்பி மதுரை விமான நிலையம் வர உள்ளனர். இவர்கள் இருவரையும் வரவேற்ப்பதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கூடியுள்ளனர்.
ஒரு புறம் திமுக தொண்டர்கள் திமுக கொடிகளை ஏந்தியபடி ஸ்டாலினை வரவேற்பதற்காக காத்திருந்த நிலையில், மறுபுறம் அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடிகளையும், பதாகைகளையும் ஏந்திக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க காத்திருக்கின்றனர்.
இவ்வாறாக இரு கட்சிகளின் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் அந்த பகுதியில் கூடியிருப்பதால், சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.